எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து (Ranil Wickramasinghe) உறுதியான பதிலுக்காக காத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பிலிபிட்டிய மகாவலி விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ரணில் விக்ரமசிங்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு நேரடியாக ஆதரவளித்து அவரை வெற்றிபெறச் செய்வேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரியான வேலைத்திட்டம்
பாதாளத்தில் வீழ்ந்திருந்த நாட்டிற்கு சரியான வேலைத்திட்டத்தை முன்வைத்த ரணில் விக்கிரமசிங்க நாட்டை சரியாக ஆட்சி செய்கின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டின் அதிபர் வேட்பாளர்கள் சமூக ஊடகங்களிலும் ஏராளமான வேட்பாளர்கள் உள்ளனர் என்றும் நீங்கள் யாராக இருந்தாலும் ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் இன்னும் ஐந்து வருடங்களுக்கு தொடர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நேரத்தில் நாம் அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டுமெனவும் அத்தோடு இல்லையெனில் நாடு மீண்டும் பாதாளத்தில் விழும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.