ஈரான் அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், 247 பயணிகளுடன் லண்டன் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் விமானிக்கு பறந்த தகவலை அடுத்து இடைநடுவில் விமானம் மீண்டும் சென்னை திரும்பிய சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.
ஈரானின் நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் பார்டோ ஆகிய 3 அணுசக்தி நிலையங்களில் அமெரிக்க போர் விமானங்கள், இன்று(22) அதிகாலை தாக்குதல் நடத்தி உள்ளன. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
நடுவானில் விமானிக்கு பறந்த தகவல்
இந்த நிலையில் இன்று(ஜூன் 22) காலை 6.24 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் -777 விமானம் லண்டனுக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் 247 பயணிகள் 15 பணியாளர்கள் என மொத்தம் 262 பேர் பயணம் செய்தனர்.

விமானம் அரபிக் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, விமானிக்கு மத்திய கிழக்கு நாடுகளில் வான்வழி மூடப்பட்டதாகவும், மேற்கொண்டு பயணத்தை தொடர வேண்டாம் என்றும் தகவல் வந்தது. இதையடுத்து விமானி சென்னை விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். விமானம் 8.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

