யாழ். மாநகர மத்திய பகுதியில் அதாவது அரச பேருந்து தரிப்பிடத்தின் முன் பகுதியில்
தொற்று நோய்கள் மற்றும் நுளம்பினால் பரவும் நோய்கள் அதிகளவு பரவும் அபாயத்தில்
இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
குறித்த பகுதியில் வடிகால் புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருவதால் சுமார் 20 மீற்றர் வடிகால் அமைப்பு திறந்த நிலையில் காணப்படுவதோடு வீதியானது மூடப்பட்டே காணப்படுகின்றது.
இதன் காரணமாக அந்த வழி, போக்குவரத்துக்கு
இடையூறாக இருப்பதோடு குறித்த பகுதியில் திறந்த நிலையில் காணப்படும் வடிகால் அமைப்பில் அதிகளவு நீர் தேங்கியுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கை
நீர் தேங்கி நிற்கும் பகுதியில் பொலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக்
பொருட்கள் விலங்கு எச்சங்கள் மற்றும் பல கழிவு பொருட்கள் காணப்படும் நிலையில் துர்நாற்றம் வீசுகின்றது.
இதன் காரணமாக அந்த பகுதியில் வடிகால் அமைப்பில் அதிகளவான ஈக்கள்
மற்றும் நுளம்புகள் பெருகும் அபாயகரமாக உள்ளது.
பிரதானமாக அந்த பகுதிக்கு அண்மித்த பகுதியிலே பழக்கடை வியாபார நிலையங்கள்
அதிகளவு காணப்படுவதோடு இதனால் அவ்வியாபார நிலையங்களின் வியாபார
நடவடிக்கைகள் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் விசனம்
தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த இடத்தில் பெருகும் ஈக்கள் அண்மித்த பகுதியில் இருக்கும்
பழக்கடை மற்றும் திறந்த உணவகங்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் என்பவற்றில் இருப்பதால் பாரியளவு நோய் பரவும் அபாயம் உள்ளது எனவும் இதற்கான மாற்று
நடவடிக்கைகளை மாநகர சபை உடனடியாக செய்ய வேண்டும் என இப் பகுதியில் உள்ள
வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.