கனேடிய அரசாங்கத்தினால் (Government of Canada) அண்மையில் புதுப்பிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் அடங்கிய பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் (LTTE) மீளவும் உள்ளடக்கப்பட்டிருப்பது குறித்து இலங்கை அரசாங்கம் வரவேற்பு வெளியிட்டுள்ளது.
கனேடிய அரசாங்கம் கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் உள்ளடக்கியது.
அப்பட்டியல் 5 வருடங்களுக்கு ஒருமுறை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் நிலையில் இவ்வருடம் ஜுன் மாதம் 7ஆம் திகதி அந்தப் பட்டியல் மீளப் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது.
கனேடிய அரசாங்கம்
அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட பட்டியலிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு வரவேற்பு தெரிவித்து வெளிவிவகார அமைச்சினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் “கனடாவைத் தளமாகக்கொண்டு இயங்கிய உலகத்தமிழ் அமைப்புடன் இணைந்ததாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் தொடர்ந்து உள்ளடக்குவதற்கு கனேடிய அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தை வரவேற்கிறோம்.
அத்துடன் கனேடிய அரசாங்கத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புதுப்பித்தல் மீளாய்வின் பிரகாரம், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் எச்சங்கள் சர்வதேச ரீதியில் நிதி திரட்டலிலும், இயங்குகையிலும் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
நிதி திரட்டல் நடவடிக்கை
உலகத்தமிழ் அமைப்பு தொடர்பில் கனேடிய அரசாங்கத்தினால் அளிக்கப்பட்டிருக்கும் விளக்கத்தில், அவ்வமைப்பானது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில் நிதி திரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் ஊடாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத செயற்பாடுகளுக்குக் களம் அமைத்துக்கொடுத்திருக்கிறது.
எனவே, இவ்வமைப்புக்களால் தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவுவதன் காரணமாகவே அவற்றைத் தடை பட்டியலில் பேணுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது“ என வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.