முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இந்த அரசாங்கம் பழிவாங்குவதாக சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பினை குறைத்தமையானது அவரது சிறப்புரிமைகளை குறைப்பதாக அமையாது எனவும் அது ஓர் பழிவாங்கல் செயற்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.
வத்தளை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்…,
ஜனாதிபதிகளின் சிறப்புரிமை மீறல்
மகிந்த ராஜபக்சவை ஒரு நாளும் மறந்து விட முடியாது, அரசியல் கொள்கைகள் மாறுபட்டாலும் அவரை மறந்து விட முடியாது.
போரில் வெற்றியீட்டிய தலைவரான மகிந்தவிற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இவ்வாறு பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டிலும் ஜே.வி.பி.யினர் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
போரின் இறுதிக் கட்டத்தில் போரை நிறுத்துவதற்கு முயற்சித்தனர். அமெரிக்க டொலர்களுக்காக ஜே.வி.பி.யினர் இவ்வாறு செய்தனரே தவிர, தமிழ் மக்கள் மீதான கரிசனையில் அல்ல.
ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மீறுவதனை விடவும் மகிந்த மீதான எதிர்ப்பை வெளியிடும் வகையில் இவ்வாறு பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது என திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.