முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தூக்கிலிடும் எண்ணம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்பில் தான் கூறிய கருத்துக்களை சிலர் தவறாகப்புரிந்து கொண்டுள்ளதாகவும் இன்று விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முன்னாள் ஜனாதிபதி பெப்ரவரி 2009 இல் போர் நிறுத்தத்திற்கு உத்தரவிட்டு பாதுகாப்பு படையினரை அழித்ததற்காக மட்டுமே அவர் தூக்கிலிடப்பட்டிருப்பார் என்று நான் கூறினேன்.

ராஜபக்ச நாட்டிற்கு இழைத்த துரோகம்
இது வேறு நாடாக இருந்திருந்தால், இந்த துரோகச்செயலுக்காக மகிந்த ராஜபக்சவை காலில் தூக்கிக்கட்டி கொலை செய்திருப்பார்கள் என்று மட்டுமே நான் கூறினேன்.
முன்னாள் ஜனாதிபதி மீது தனக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை என்றாலும், ராஜபக்ச நாட்டிற்கு இழைத்த துரோகத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே கூறினேன்.
இருப்பினும், ஒரு புத்த பிக்கு உட்பட சிலர் எனது உணர்வுகளைத் தவறாகப் புரிந்துகொண்டு சில விடயங்களை வெளியிடுவதாகவும் பொன்சேகா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை மகிந்த ராஜபக்ச ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து அவரின் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கைக்கு கருத்து தெரிவிக்கும் போது, மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டும் என பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
அத்தோடு, ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து பெறுமதி மிக்க அரச சொத்துக்கள் சட்டவிரோதமாக தனிப்பட்ட இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விடயம் அரசியல் பரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த மீது தனக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை என விளக்கமளித்துள்ளார்.

