இலங்கை தமிழரசுக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் ஆதரவு நிலைப்பாடு என்பது முற்றுப்பெறாத விமர்சனங்களை எழுப்பி வருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் கடந்த முதலாம் கடந்த திகதி சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாக அறிவித்த நாள் முதல் இன்று வரை கட்சி மீதான விசனங்கள் மற்றும் விமர்சனங்கள் மேலோங்கி வருகின்றன.
சஜித்தை ஆதரிப்பதாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட தரப்பு அறிவித்திதுள்ளது.
ஆனால் அக்கட்சியின் முக்கியஸ்தர் பா. அரியநேத்திரன் தமிழ் மக்களுக்கான தீர்வு எனும் கொள்கையுடன் தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
நிலைப்பாட்டில் பிளவு
இவருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி. சிறீதரன், குகதாசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் காணப்படுகின்றனர்.
இந்த ஆதரவு நிலைப்பாட்டின் பிளவு இவ்வளவு காலமும் 2 ஆகா காணப்பட்ட நிலையில் நேற்று அது 3ஆகா மாறும் சாத்தியம் உருவாகியுள்ளது.
இதற்கு காரணம் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்க எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனின் வீட்டிற்கு சென்றமையே.
வடக்கு – கிழக்கில் அதிக தொகையான வாக்காளர்களை கொண்ட வன்னி மாவட்டத்தின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் நிர்மலநாதனை ஜனாதிபதி சந்தித்தபோது, அங்கு வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் வருகைதந்துள்ளனர்.
இந்த சந்திப்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டை ஆதரவாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த அறிவிப்பின் பின்புலம், தமிழரசுக் கட்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
வன்னியை இலக்கு வைத்த ரணில்
பெரும் வாக்காளர்களை கொண்ட வன்னியை இலக்கு வைத்த ரணிலின் பிரசன்னம் திருப்புமுனை அரசியலுக்கு வழிவகுக்குமா என கேள்வியை தற்போது தோற்றுவித்துள்ளது.
இது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மாறுபட்ட சூழ்நிலையையும் தோற்றுவித்துள்ளதாக கருத்துக்களும் எழுந்துள்ளன.
இந்த நிலைப்பாட்டுக்கு உள்ளாகியுள்ள,
தமிழரசுக் கட்சியானது தனது கட்சியை காப்பாற்றுமா? அல்லது சஜித்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்றுமா?
ரணிலின் இந்த பிரசன்னம் வடக்கு கிழக்கு மாத்திரம் அல்லாது தென்னிலங்கையில் பேசுபொருளாகியுள்ளது.
கட்சியின் அறிவிப்புக்கு பின்னர் மாறுபட்ட நிலைகளில் அரசியல் தலைமைகள் காணப்படுவது வாக்காளர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது.
மேலும் வன்னி மாவட்டத்தில் முக்கிய கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித்தின் பக்கம் தனது ஆதரவை அறிவித்துள்ள நிலையில், வன்னியில் தனக்கான பலத்தை பெற்றுக்கொள்ள ரணில் முயற்சிக்கின்றார் என்ற சவால் மிக்க அரசியல் தோற்றப்பாடும் காணப்படுவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதனடிப்படையில் வடக்கு – கிழக்கு வாக்காளர்கள் மத்தியில் மாறுபட்ட சூழ்நிலை நிலவி வருவதாக அரசியல் அவதானிகள் கூறிவருகின்றனர்.
இலங்கை தமிழரசுக்கட்சி
இலங்கை தமிழரசுக்கட்சி தனது நிலைப்பட்டை அறிவிக்கும் முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனுடன் உடன்படிக்கைகான கலந்துரையாடல் மேற்கொண்ட போது, அதனை முற்றாக நிராகரித்ததோடு அவர், தனது வன்னி மாவட்ட மக்களோடு கலந்துரையாட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார் .
அதனை நிராகரித்ததின் தொடர்ச்சியாக சார்ல்ஸ் நிர்மலநாதன் சமூக வலைத்தளங்களில் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக வடக்கு கிழக்கில் உள்ள வேட்பாளர்கள் மத்தியில் ரணில் விக்ரமசிங்க மீதான ஆதரவு அதிகரித்து வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.