Courtesy: Sivaa Mayuri
இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், தலைமையிலான தேர்தல் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை தயாரிப்பதற்கான ஒன்பது பேர் கொண்ட ஆணைக்குழுவில், நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் எவையும், தமது முன்மொழிவுகள் எதனையும் சமர்ப்பிக்கவில்லை.
இந்தநிலையில் ஆணைக்குழு தனது அறிக்கையை இறுதி செய்து, ஒரு கலப்பு முறையை பின்பற்ற பரிந்துரைத்துள்ளது.
தேர்தல் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதற்கும், ஒவ்வொரு 125,000 வாக்காளர்களுக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருப்பதை உறுதிப்படுத்துவதும் அதன் பரிந்துரைகளில் அடங்குகின்றன.
பெண்களின் பிரதிநிதித்துவம்
தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை மேம்படுத்தவும், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 50 சதவீதமாக உயர்த்தவும் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது
ஊடக வழிகாட்டுதல்களில் திருத்தங்கள் மற்றும் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நெறிமுறைக் குறியீடு அறிமுகப்படுத்துதல் ஆகியவை மற்ற பரிந்துரைகளில் அடங்குகின்றன.
புலம்பெயர்ந்த வாக்காளர்கள் மற்றும் இராஜதந்திர பணிகளுடன் இணைந்த வெளிநாட்டு சேவையில் உள்ளவர்கள் வாக்களிக்கக்கூடிய ஒரு முறையை அறிமுகப்படுத்தவும் ஆணையகம் முன்மொழிந்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புத் தேவையுடையவர்களுக்கான மேம்பட்ட வாக்களிக்கும் முறையும் ஆணையகத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஆணைக்குழுவில் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் 2024 ஜூலை 17 அன்று அறிக்கை கையளிக்கப்பட்டது.
you may like this