நிவின் பாலி நடிப்பில் ஜன கன மன படத்தை இயக்கிய டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் வெளியிருக்கும் ”மலையாளி ஃபிரம் இந்தியா” படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
விளையாட்டுப் பிள்ளையாக ஊரில் அலப்பறை செய்துகொண்டு, அரசியலில் ஒருநிலைக்கு வருவேன் எனக் கூறி சுற்றும் கோபி எனும் கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடித்துள்ளார்.
மல்கோஷ் எனும் நண்பருடன் சேர்ந்துகொண்டு பொறுப்பற்ற நபராக கலாட்டா செய்யும் கோபி, ஒரு கட்டத்தில் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.
அதில் இருந்து தப்பிக்க வெளிநாடு செல்லும் அவர், பாலைவனத்தில் பயிர்த்தொழில் செய்ய மாட்டிக்கொள்கிறார்.
அதன் பின்னர் அவர் பொறுப்பான நபராக மாறினாரா, பக்கத்து நாட்டு மக்கள் மீது அவர் கொண்ட சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டதா என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
கிரிக்கெட் விளையாடிக் கொண்டு எதிர்க்கட்சி தொண்டர்களுடன் சண்டைபோடும் கோபி, போலீஸ் ஸ்டேஷனில் எங்க ஆட்சி வரும் அப்போ பாருங்க என போலீசுக்கே சவால்விடும் காட்சியில் கலகலப்பூட்டுகிறார்.
டி20 உலகக்கோப்பையில் வெற்றிபெறும் பாகிஸ்தான் மீது வெறுப்பை காட்டும் கோபி (நிவின் பாலி), ஒரு சூழலில் பாகிஸ்தான் நபர் ஒருவருடனேயே வேலை செய்யும் நிலைக்கு செல்லும்போது அரங்கில் சிரிப்பலை அதிர்கிறது.
Varshangalkku Shesham திரை விமர்சனம்
நகைச்சுவையைக் கொண்டு முக்கால்வாசி படம் வரை நகர்த்திய இயக்குனர் டிஜோ ஜோஸ், கடைசி அரைமணிநேரத்தில் உணர்ச்சிமிக்க காட்சிகள் மூலம் நெகிழ வைக்கிறார்.
கதாநாயகி அனஸ்வரா ராஜனுக்கு பெரிய வேலை இல்லை. ஆனால், நண்பராக வரும் மல்கோஷ் (தியான் ஸ்ரீனிவாசன்) ஒவ்வொரு காட்சியிலும் நம்மை சிரிக்க வைக்க தவறவில்லை.
அதேபோல் நிவின் பாலி தனக்கே உரிய பாடிலாங்குவேஜுடன் காமெடியில் பின்னுகிறார். ஆனாலும், கிளைமேக்ஸ் காட்சிகளில் பார்வையாளர்களை கலங்க வைக்கிறார்.
பாகிஸ்தானியராக வரும் நபர் நிவின் பாலியை வேலை வாங்கும் காட்சிகளில் சிரிக்க வைத்தாலும், கண்கலங்க வைக்கும் வகையில் இறுதிக்கட்ட காட்சிகளில் மிரட்டியுள்ளார்.
மதம், நாடு கடந்து மனிதம் தான் உயர்ந்து நிற்கும் என்ற கருத்தை நகைச்சுவையான கதைக்களத்தில் சிறப்பாக கூறி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.
க்ளாப்ஸ்
காட்சிக்கு காட்சி
கலகலப்பூட்டும் திரைக்கதை
நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு
படத்துடன் ஒன்றவைக்கும் இசை
பல்ப்ஸ்
நிவின் பாலிக்கு ஏற்பட்ட பிரச்சனை எப்படி சரியானது என்பதில் விளக்கம் இல்லை