ரஷ்ய ஜனாதிபதி புடினை ‘முட்டாள்’ என விமர்சித்த பாடகர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் ஊரால்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்த போர் எதிர்ப்பாளரும் பாடகருமான வடிம் ஸ்ட்ரோய்கின் என்பவர் உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளார்.
மேலும், உக்ரைன் இராணுவத்தை ஆதரித்தது மற்றும் தடைசெய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்தது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மர்மமான முறையில் உயிரிழப்பு
இந்நிலையில், கடந்த 05 ஆம் திகதி அந்நாட்டு காவல்துறையினர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10ஆவது தளத்திலுள்ள அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவரது வீட்டின் சமையலறையின் ஜன்னல்களை திறக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, போர் எதிர்ப்பாளரான வடிம் ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்து தொடர்ந்து பிரச்சாரங்கள் மேற்கொண்டதுடன், ஜனாதிபதி புடினை ‘முட்டாள்’ எனக் கூறியதுடன் அவரது செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளார்.
மற்றுமொரு நடனக் கலைஞர் மரணம்
இதேபோல், கடந்த 2024 நவம்பர் மாதம் ஜனாதிபதி புடினை விமர்சித்த ரஷ்ய நடனக் கலைஞரான விளாடிமிர் ஷ்க்ளியாரோவ் என்பவர் ஒரு கட்டிடத்தின் 5ஆ வது தளத்திலிருந்து மர்மமான முறையில் கீழே விழுந்து பலியானார்.
அவரது மரணத்தை விபத்தாக பதிவு செய்த அந்நாட்டு அதிகாரிகள் அதிகப்படியான வலி நிவாரணி மாத்திரைகளை அவர் சாப்பிட்டதினால் இந்த விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக குறிப்பிட்டிருந்தனர்.