மாகாணசபையின் நிர்வாகத்தினகீழ் இயங்கிவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை
மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதானது மாகாண சபையின் அதிகாரத்தை
மத்திய அரசுக்கு மீள கையளிப்பதாக அமையுமென தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற
உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் (Sathiyalingam)குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று (28.05) நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் இவ்வாறான
தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
முதலாவது அரசியல் யாப்பு ரீதியான தீர்வே மாகாண சபை முறைமை
தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் உரிமைப்போராட்டத்திற்கு கிடைத்த முதலாவது
அரசியல் யாப்பு ரீதியான தீர்வே மாகாண சபை முறைமையாகும். தமிழ் மக்களுக்கான
இறுதித்தீர்வாக மாகாண சபை முறைமை அமையாதுவிடினும் ஓரளவுக்கேனும் தம்மைத்தாமே
ஆளும் அதிகாரம் மாகாணசபை சட்டத்தில் உள்ளது.

மாகாண சபையிடம் மாகாண சுகாதார
துறையை அபிவிருத்தி செய்வதற்கான போதுமான நிதி வளம் இல்லையென்பதால் மத்திய
அரசின்கீழ் கொண்டு செல்வதாக காரணம் முன்வைக்கப்படுகின்றது.
மாகாணசபை சுயமாக
இயங்கக்கூடியவகையில் அதனை பலப்படுத்துவது மத்திய அரசின் கடமையாகும். இதுவரை
மாகாணத்திற்கான நிதியை திரட்டக்கூடிய வகையிலான எந்தவிதமான விசேட
திட்டங்களையும் மத்தியில் ஆட்சிசெய்த அரசாங்கங்கள் செய்யவில்லை.
மாறாக
வெளிநாட்டு முதலீட்டாளர்களைக்கொண்டு மாகாணத்திற்கான அந்நிய செலாவணியை
ஈட்டக்கூடியவகையிலான திட்டங்கள் வகுக்கப்பட்டபோதிலும் அதனை
நடைமுறைப்படுத்தவதற்கு மத்திய அரசு மறைமுகமாக பலதடைகளை போட்டது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பாரிய வளப்பற்றாக்குறை
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பாரிய வளப்பற்றாக்குறை உள்ளது என்பது
மறுக்கமுடியாது உண்மையாகும். ஆனாலும் அதனை சீர்செய்வதற்காக வைத்தியசாலை
நிர்வாகத்தை மத்திய அரசின்கீழ் கொண்டுவருதென்பது தீர்வாக அமையாது.

13வது
திருத்தச்சட்டத்தில் குறிப்பாக சுகாதாரம், கல்வி, விவசாயம் போன்ற துறைகள்
மாகாண சபையின் நேரடி நிர்வாகத்தின்கீழ் காணப்படுகின்றன.
ஏற்கனவே
தேசியபாடசாலைகள் என்ற போர்வையில் மாகாண கல்வி அமைச்சின்கீழ் இயங்கிவந்த
முன்னணிப்பாடசாலைகள் மத்திய அரசின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும்
ஆபத்தினை அறியாதவர்களாய் எம்மவர்களும் துணையேபோயுள்ளனர் என்பது கவலைக்குரிய
விடயமாகும்.
மாகாண வைத்தியசாலைகள் மத்திய அரசின்கீழ் கொண்டுவரப்பட்டாலும் சுகாதார
துறைக்கான அபிவிருத்திக்கு பெரும்பாலும் வெளிநாட்டு நிதியே
பயன்படுத்தப்படுகின்றது.
சுகாதாரதுறைக்கு நிதி வழங்கும் நிறுவனங்கள்
சுகாதாரத்துறையை பொறுத்துவரை பன்னாட்டு நிதிவழங்கும்
நிறுவனங்களான ஆசிய அபிவிருத்தி வங்கி, உலகவங்கி என்பன தொடர்ச்சியாக
நிதிவழங்கிவருகின்றன. மத்திய அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளும்
நிதியை மாகாண அமைச்சினூடாக வழங்குவதன்மூலம் மாகாண சுகாதார துறையை
அபிவிருத்திசெய்யமுடியும்.

கடந்த காலங்களில் மாகாண சுகாதார அமைச்சராக நான் இருந்தபோது மத்திய
அரசாங்கத்தின் அனுமதியுடன் நெதர்லாந்து அரசாங்கத்தின் பாரிய நிதிபங்களிப்புடனான
சுகாதார அபிவிருத்தி திட்டமொன்றினை வடக்கு மாகாணத்தில்
நடைமுறைப்படுத்தியிருந்தோம்.
ஆகவே மாகாண சுகாதார துறையை அபிவிருத்திசெய்வதற்கு
அதனை மத்திய அரசாங்கத்தின்கீழ் கொண்டுவருவது ஒருபோதும் தீர்வாக அமையாது. மாறாக
இருக்கும் அதிகாரங்களையும் மத்திய அரசாங்கம் கையகப்படுத்தவதற்கு நாமே
வாய்ப்பினை வழங்கியதாக அமைந்துவிடும். கடந்த அரசாங்கங்கள் செய்த தவறை இந்த
அரசாங்கமும் தொடர்கின்றதாக என்ற சந்தேகம் ஏற்படுகின்றது என்றார்.

