தனது சகோதரன் மேற்கொண்ட மோசடிகளுக்கும் தனக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நிகழ்வொன்றுக்கு வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம், அவரது சகோதரரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான மோசடிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்புகள் துண்டிப்பு
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், எனது சகோதரருக்கு எதிராக முதலாவது முறைப்பாட்டை நானே மேற்கொண்டிருந்தேன்.
அத்துடன், எனது அமைச்சில் இருந்தும் அவரை வெளியேற்றியிருந்தேன்.
அவரிடம் ஏமாற வேண்டாம் என்று ஊடகங்கள் வாயிலாக, சமூக வலைத்தளங்கள் வாயிலாக அறிவித்திருந்தேன். அந்தப் பதிவுகள் இன்னும் சமூக வலைத்தளங்களில் காணப்படுகின்றது.
ஒரே குடும்பத்திற்குள் மாறுபட்ட குணமுடையவர்கள் இருக்கவே செய்வார்கள். அவ்வாறானவர்கள் செய்யும் தவறுகளுக்காக நான் சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டியதில்லை.
அவரது மோசடிகள் குறித்து தகவல் கிடைத்தவுடன் அவருடனான தொடர்புகளை நான் துண்டித்து விட்டிருந்தேன் என்றும் மனுஷ நாணயக்கார தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.