வவுனியாவில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மற்றும் போதைப்பொருள்
மாபியாவுக்கு எதிராக மக்கள் தகவல்களை எமக்கோ அல்லது பொலிஸாருக்கோ வழங்கினால்
சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, யாழில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மாபியாவுக்கு எதிராக மக்கள் தகவல்களை எனக்குத் தரலாம் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ஜெகதீஸ்வரன், “வவுனியாவில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மற்றும் போதைப் பொருள்
மாபியாவுக்கு எதிராக மக்கள் தகவல்களை எமக்கோ அல்லது பொலிசாருக்கோ வழங்கலாம்.
அவ்வாறு வழங்கினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தொடர்பு கொள்ளுங்கள்..
அத்துடன், மக்களிடம்
அதிகமான காசோலைகளை பெற்றுக் கொண்டு அதை அடிப்படையாகக் கொண்டு மிரட்டப்பட்டு
சொத்துக்களை இழந்தவர்களும் தொடர்பு கொள்ள முடியும்.

வன்னியின் பல பகுதிகளில் போலியான ஆவணங்கள் மற்றும் போலியான உறுதிகள் மூலம்
மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் ஊடாக
தகவல்கள் திரட்டப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோதச் செயற்பாடுகளை
மேற்கொள்ளபவர்கள் மற்றும் அச் செயற்பாடுகள் மூலம் சொத்து சேர்த்தவர்கள்
தொடர்பாகவும் முறைப்பாடுகளை செய்ய முடியும். அவ்வாறு செய்வதன் மூலம் உரிய
வகையில் விசாரணை நடத்தப்பட்டு சடட நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

