பிரபல கொரியன் இயக்குநர் போங் ஜூன்-ஹோ இயக்கத்தில் ராபர்ட் பேட்டின்சன் நடிப்பில் வெளியாகியுள்ள “Mickey 17” திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
2054ஆம் ஆண்டில் நிஃப்ல்ஹெய்ம் என்ற கிரகத்திற்கு மனிதர்கள் ஸ்பெஸ்ஷிப் மூலம் செல்கின்றனர்.
அந்த கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சூழல் உள்ளதா என்பதை அறிய, மிக்கி என்ற இளைஞரை பரிசோதனை எலி போல் இறக்கிவிடுகின்றனர்.
அவருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுக்கு இறக்கிறார். பின்பு அவரை பிரின்டிங் (குளோனிங் போல) முறையில் மீண்டும் உயிர்ப்பிக்கிறார்கள்.
இதேபோல் ஒவ்வொருமுறையும் அவர் பாதிக்கப்பட்டு இறந்து மீண்டும் மீண்டும் பிரிண்ட் செய்யப்படுகிறார்.
அவர் 17வது முறையாக பிரிண்ட் ஆகி வரும்போது கிரகத்தில் தரையிறங்க ஏதுவாக மருந்து ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள்.
பின்னர் ஒரு குழுவுடன் வேறு யாராவது கிரகத்தில் இருக்கிறார்களா என ஆராய செல்லும்போது, மிக்கி பெரிய புழு போன்ற உயிரினங்களிடம் மாட்டிக்கொள்கிறார்.
ஆனால் அவை அவரை ஒன்றும் செய்யாமல் வெளியே கொண்டு வந்து விடுகின்றன. பின் ஷிப்புக்கு திரும்பும் மிக்கி தனது 18வது பிரிண்ட் மிக்கியைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.
அதன் பின்னர் இருவரில் யார் உயிருடன் இருக்கப் போகிறார்? வேற்றுகிரகத்தில் மனிதர்கள் வாழ வழி கிடைத்ததா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
2019யில் வெளியாகி ஆஸ்கர் உட்பட பல விருதுகளை வாங்கிக் குவித்த ‘பாரசைட்’ படத்தை இயக்கிய போங் ஜூன்-ஹோ இப்படத்தை எடுத்திருக்கிறார்.
மிக்கி கதாபாத்திரத்தில் ராபர்ட் பேட்டின்சன் அதகளம் செய்துள்ளார்.
மிக்கி 17 மற்றும் மிக்கி 18 என இரு கதாபாத்திரங்களிலும் வித்தியாசங்களை காட்டி மிரட்டியிருக்கிறார்.
குறிப்பாக, ஹீரோயின் உடன் பெட்ரூம் சீனில் இரண்டு மிக்கியும் கொடுக்கும் ரியாக்ஷன்ஸ் சிரிப்பலை.
படம் முழுக்க தனது நடிப்பால் பேட்டின்சன் தாங்குகிறார்.
முதல் நாள் கிங்ஸ்டன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
அவருக்கு ஜோடியாக வரும் நவோமி அக்கி நாஷா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
இருவருமே போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு அடுத்தடியாக கென்னத் மார்ஷலாக வரும் மார்க் ருப்பாலோ வில்லத்தனத்தில் அதிகம் ஸ்கோர் செய்கிறார்.
குளோனிங், ஸ்பேஸ்ஷிப் டிராவல் போன்றவற்றை பல ஹாலிவுட் படங்களில் நாம் பார்த்திருப்போம்.
அதேபாணியில் இந்த கதையும் நகர்ந்தாலும், சுவாரஸ்யம் குறையாமல் திரைக்கதையை கொண்டு சென்ற விதத்தில் நம்மை உட்கார வைக்கிறார் இயக்குநர். பல இடங்களில் நம்மை சிரிக்கவும் வைக்கிறார்.
ஒரு காட்சியில் ஹீரோ வேற்றுகிரக உயிரினங்களிடம் “என்னை ஏன் சாப்பிட மாட்டுகிறீர்கள்? நான் நல்ல உணவுதான்” என்று கூறும்போது குபீர் சிரிப்பு எழுகிறது.
ஸ்பேஸ்ஷிப்பை தனது கன்ட்ரோலில் வைத்திருக்கும் ருப்பாலோ, ஒரு கட்டத்தில் ஹிட்லர் கெட்டப்பில் வருகிறார்.
க்ரீப்பர் என வேற்றுகிரக உயிரினத்திற்கு அவர் பெயர் வைக்கிறார். ஆனால் அந்த க்ரீப்பர்கள் மனிதரை காப்பாற்றுகின்றன. அதேசமயம், தங்களில் ஒரு குட்டியை இழந்ததால் கோபம் கொண்டு ஸ்பெஸ்ஷிப்பை முற்றுகையிடுகின்றன. மனிதர்களுக்கும், வேற்றுகிரக உயிரினங்களுக்குமான வித்தியாசம் மற்றும் ஆக்கிரமிப்புதான் கதை என்பதை கிளைமேக்சில்தான் இயக்குநர் தெளிவுபடுத்துகிறார்.
அதுவரை கதை பிரின்டிங், உயிர்வாழ வேண்டுமென்றால் மனிதர்கள் எப்படி வேண்டுமானாலும் சிந்திப்பார்கள் என எங்கெங்கோ சென்று திரும்புகிறது.
அழகு பதுமையாக வரும் பிரெஞ்சு நடிகை அனமரியா உடனான பேட்டின்சனின் ரோமன்ஸ் சீன்ஸை இன்னும் கொஞ்சம் நீட்டித்திருக்கலாம்.
க்ளாப்ஸ்
நடிப்பு, மேக்கிங், காமெடி வசனங்கள்
பல்ப்ஸ்
ஹாலிவுட்டில் பார்த்து பழகிய கதைக்களம்தான்
மொத்தத்தில் ஸ்பேஸ்ஷிப் டிராவல் படங்களை விரும்பிப் பார்ப்பவர்கள் ஒருமுறை இந்த “Mickey 17” ஐ விசிட் அடிக்கலாம்.