2007ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) நிர்வாகத்தால் ஆரம்பிக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட, குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான மிஹின் லங்கா தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிறுவனம் பாரிய நட்டத்தை சந்தித்ததுடன், பொது நிதியும் வீணடிக்கப்பட்டது.
இதனையடுத்து, 2016ஆம் ஆண்டு விமான நிறுவனம் தனது செயற்பாடுகளை முடித்துக்கொண்ட போதும், செயற்பாட்டை முடிவுறுத்தும் செயன்முறை இன்னும் முழுமையடையாமல் உள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதே சமயம் இரண்டு அரசு வங்கிகள், குறித்த நிறுவனத்துக்கு வழங்கிய பில்லியன் கணக்கான ரூபாய் கடன்களை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
செலவு அறிக்கை
2024 ஒக்டோபர் வரவு செலவு அறிக்கையின்படி, மிஹின் லங்கா இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு தலா 3.17 பில்லியன் ரூபாய்களை செலுத்த வேண்டும்.
பகுதி வட்டி செலுத்தப்பட்டாலும், அசல் தொகை இன்னும் செலுத்தப்படாமல் உள்ளது.
ரூபாய் கடன்களுக்கு மேலதிகமாக மிஹின் லங்கா நிறுவனம், அமெரிக்க டொலரில் கடனை பெற்றிருந்தமையால், அது கடனை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.