இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சென்னையில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது பேரிடர் காலத்தில் இலங்கைக்குத் துரிதமாக உதவிய இந்திய அரசுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குமான அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்த தமிழக அரசுக்கும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் சார்பில் பிரதி அமைச்சர் பிரதீப் தனது நன்றியை தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்துக் கொண்டார்.
மலையக மாணவர்களுக்கான தமிழகத்தில் உயர் கல்வி வாய்ப்புகள் தொடர்பில் பிரதானமாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
சபரிமலை ஐயப்ப யாத்திரையைப் புனித யாத்திரையாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியமை தொடர்பில் தமிழக முதலமைச்சர் இலங்கை அரசுக்குப் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மலையக மக்களுக்கு உதவி
பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உதவிகளை வழங்கவும் கலை, கலாசார கல்வி அபிவிருத்திக்குத் தொடர்ந்து தமிழக அரசு உதவி மற்றும் ஒத்துழைப்புகளை நல்குவதாகவும் இதன்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சென்னையில் உள்ள இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் கலாநிதி கணேசன் கேதீஸ்வரனும் கலந்துகொண்டார்.
இலங்கையில் கடந்த 27ஆம் திகதி முதல் இரு நாட்கள் வீசிய டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் மலையகம் உட்பட 17 மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகிய நிலையில் குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் வாழும் பகுதிகளில் பாரிய அளவில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டன.
பேரிடரில் இருந்து இலங்கையை மீட்க இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் எமக்கு உதவிக்கரம் நீட்டின.
காலம் உணர்ந்து செயற்பட்ட இந்திய அரசுக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும், மலையக மக்களுக்கு இலங்கை அரசு முன்னெடுத்துள்ள அபிவிருத்தி மற்றும் பொருளாதார செயற்பாடுகள் சம்பந்தமான விளக்கத்தையும் வழங்கினோம்.
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களின் அடுத்த கட்ட நகர்வுக்காக இலங்கை அரசு முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் பற்றி தெளிவுபடுத்தவும், அதேநேரம் தமிழக அரசின் குறுகிய கால நீண்ட கால ஒத்துழைப்பு சம்பந்தமாக கலந்துரையாடவும் இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Deputy High Commissioner Dr. Ganesanathan Geathiswaran, facilitated a meeting between the Hon. Chief Minister of Tamil Nadu, Mr. M.K. Stalin, and the Hon. Deputy Minister for Plantation and Community Infrastructure of Sri Lanka, Mr. SundaralingamPradeep, in Chennai.#DiplomacyLk pic.twitter.com/mMPShhIpAq
— SRI LANKA DHC (@SLDHCinChennai) December 20, 2025
மேலும், இலங்கை மற்றும் தமிழ் நாட்டு அரசின் உறவினை வலுப்படுத்தும் முகமாக நேற்றைய தினம் (19.12.2025) தமிழ் நாட்டின் தகவல் தொழிநுட்பதுறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜனை உத்தியோகபூர்வமாக சந்தித்து பிரதி அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது மலையகத்தின் தொழில்நுட்ப அபிவிருத்திக்கு தமிழ்நாட்டு அரசின் பங்களிப்பு அதிகம் இருக்கும் என அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

