Courtesy: Sivaa Mayuri
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் இருவருக்கு தலா 100க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நேற்று(28) வெளியிடப்பட்ட செயற்பாடுகள் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிகமாக, ஜனாதிபதியிடம் நிதித்துறையும், பொருளாதார மேம்பாடு, கொள்கை உருவாக்கம், திட்டமிடல் மற்றும் சுற்றுலா, எரிசக்தி, விவசாயம், நிலம், கால்நடைகள், நீர்ப்பாசனம், மீன்பிடி, மற்றும் நீரியல் வள அமைச்சுகள் ஆகிய துறைகளையும் அவர் தனது பணியின் கீழ் கொண்டுள்ளார்.
அதன்படி, அவரின் கீழ் 124 அரசு நிறுவனங்கள் வருகின்றன.
இடைக்கால அமைச்சரவை
பிரதமர் ஹரிணி அமரசூரிய நீதி, பொது நிர்வாகம், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர், கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், பெண்கள், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, வர்த்தகம், உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி உள்ளிட்ட 127 முக்கிய துறைகளை கொண்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சராக இருக்கும் விஜித ஹேரத் பல துறைகளை தம்வசம் கொண்டுள்ளார்.
அந்த வகையில், புத்த சாசனம், மதம் மற்றும் கலாசார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து, பொது பாதுகாப்பு, சுற்றுச்சூழல், வனவிலங்கு, வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூகம், உள்கட்டமைப்பு மற்றும் கிராமப்புறம் ஆகியவை அவரது மற்ற துறைகளாகும்.
அத்துடன், நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் கட்டுமானம் போன்ற துறைகள் அவரின் கீழ் உள்ள நிலையில் அவரின் கீழ் 142 நிறுவனங்கள் வருகின்றன.
அடுத்த நாடாளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வரை இடைக்கால அமைச்சரவை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் முடிவடைந்ததும் 25 பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்படவுள்ளது.