திருகோணமலை
திருகோணமலை- தம்பலகாமம் நான்கு வாசல் பிள்ளையார் கோயில் சந்தியில்
முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி இன்று (17) காலை கொட்டும் கனமழையிலும்
வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வானது இலங்கை தமிழரசு கட்சியின் தம்பலகாமம் பிரதேச சபைக்கு உறுப்பினர்களாக
தெரிவாகியவர்களின் ஏற்பாட்டிலும் வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவும் இணைந்து
ஏற்பாடு செய்திருந்தது.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, கடந்த யுத்தத்தில் உயிரிழந்த
மக்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நீடித்த வலியையும், அரசால் மறுக்கப்படும்
நீதிக்கான மக்களின் போராட்டத்தையும் வெளிப்படுத்தும் முக்கியமான வலையொலியாக
மாறியுள்ளன.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
இதன் போது இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு
கூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலியும் இடம் பெற்றது.

இந்நிகழ்வில், காணாமற்போனோரின் உறவுகள், கிராமப்புற மக்களும், சமூகச்
செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு தங்கள் துயர அனுபவங்களைப் பகிர்ந்ததோடு,
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வாழ்வுகளைப் பற்றி பேசினர்.நிகழ்வு, சமூக
நினைவாற்றலை பாதுகாத்து, இனநீக்கம், உயிரிழப்பு மற்றும் அடக்குமுறைகளுக்கு
எதிரான மக்களின் எதிர்வினையாகவும் அமைந்தது.
இதன் போது கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியில் பயணிப்போரும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பருகினர்.
இதில் பெரும்பாலனோர்கள் கொட்டும் கனமழையிலும் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இனப்படுகொலை நிகழ்ந்த
இடங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அஞ்சலி நிகழ்வுகளை நடாத்தி
வருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் நவாலியில் அமைந்துள்ள சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில்
நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

கொட்டும் மழைக்கும் மத்தியிலும் ஈகைச் சுடர் ஏற்றி, மலர்தூவி உணர்வு ரீதியாக
அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருடன் உயிரிழந்தவர்களின்
உறவினர்களும் இணைத்து கொண்டனர்.
இதேவேளை, முள்ளிவாய்க்கல் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று தமிழரசுக்கட்சியின் அராலித்
தொகுதிக்கிளையில் இடம்பெற்றது.

இரத்ததான முகாம்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தியாக தீபம் திலீபனின்
நினைவிடத்திற்கு அருகாமையில் இன்றையதினம் இரத்ததான முகாம் ஒன்று
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த இரத்ததான முகாமானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்
நடாத்தப்பட்டு வருகின்றது.

மக்கள் ஆர்வத்துடன் குறித்த இரத்ததான முகாமில் கலந்துகொண்டு குருதிக்கொடை
வழங்குவதை அவதானிக்க முடிகின்றது.











