நாடாளுமன்ற சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்து நாடாளுமன்றத்தில் பொய்யான அறிக்கைகள் வெளியிடப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) எச்சரித்துள்ளார்.
இல்லாவிட்டால் அதைத் தடுக்க தனிநபர் பிரேரணையைக் கொண்டு வருவேன் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தங்களது அரசாங்கம் கவிழ்ந்தது போல் தற்போதைய அரசாங்கத்தையும் கவிழ்க்க விரும்பவில்லை நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அதிகார ஆணவம் நிறுத்தப்பட வேண்டும்
முன்னாள் தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபதவின் இல்லத்தில் (01) பிற்பகல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டு மக்களின் குரலுக்கு செவிசாய்க்கும் வகையில் அமைச்சர்கள் செயல்பட வேண்டும் என்றும், ஒரு நாட்டை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றும் எண்ணம் தனது கட்சிக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை மதிக்க வேண்டும் என்றும், அதிகார ஆணவம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் மக்களின் தேவைகளைக் கேட்பதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளைக் குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தோல்வியுற்ற நாட்டை விட வளரும் நாட்டை ஆள விரும்புவதாக நாமல் ராஜபக்ச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.