நாமல் ராஜபக்ச நாட்டின் அடுத்த ஜனாதிபதியாவது சாத்தியமில்லையென ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அறிவித்துள்ளார்.
இன்னும் 20, 25 வருடங்களின் பின்னர் வேண்டுமானால் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாகலாம் என்றும் முஜிபுர் சுட்டிக்காட்டினார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ஜனாதிபதியாவது சாத்தியமற்றது
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
அடுத்து வரும் நான்கு வருடங்களின் பின்னர் நாமல் ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாவது சாத்தியமற்றதாகும்.
அவர்களின் ஆட்சியின் போது நாட்டை வழிநடத்திய விதம் மற்றும் ஊழல் மோசடி, அடாவடித்தனங்களை மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து நாமலை ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள் என நினைக்க முடியாது.
பிலிப்பைன்ஸில் கொடுங்கோல் ஆட்சியை முன்னெடுத்த ஃபெர்டினாண்ட் மார்கோஸ் மகன் மார்கோஸ் ஜூனியர் 25 ஆண்டுகளின் பின்னர் ஜனாதிபதியானார். மேலும் பங்களாதேஷ் கொடுங்கோல் ஆட்சியாளர் இர்ஷாட்டின் மகனும் ஆட்சியை கைப்பற்ற முயற்சித்தார்.
ஆதலால் நாமலும் ஜனாதிபதி ஆவார், ஆனால் இன்னும் 25 -30 வருடங்கள் ஆகலாம்.
மொட்டு கட்சி அவர்களின் கொள்கையில் இருந்து இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி என்ற எங்கள் கட்சிக்கும் கொள்கை இருக்கிறது.
நாங்கள் அதன்படி எமது திட்டங்களை முன்னெடுத்து செல்கிறோம். பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களை கொடுப்போம். நாடாளுமன்றத்திலும் எங்கள் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக் காட்டுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.