எவ்விதத்திலும் இந்த வருடத்தில் வருமான வரியின் அளவை குறைக்க அல்லது மாற்ற முடியாது என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன(bandula gunawardane) குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்று போது இவ்வாறு குறிப்பிட்டார்.
தனிநபர் வருமான வரி விரைவில் குறைக்கப்பட உள்ளதாக கடந்த நாட்களில் எமக்கு அறிய முடிந்தது. குறிப்பிட்ட ஒரு தொகையில் இந்த வரி குறைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை எப்போது இருந்து குறைக்க உள்ளீர்கள் என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
வரியில் மாற்றம் செய்ய முடியாது
தொடர்ந்து பதிலளித்த அமைச்சர், இந்த வருடத்திற்குள் வரியில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது. ஜனாதிபதி, பல்கலைக்கழகங்களில் உள்ள வேந்தர்கள், உப வேந்தர்கள், பேராசிரியர்கள், கலாநிதிகள் என சுமார் 750 பேருடன் நடாத்திய கல்வியை முன்னேற்றுவது தொடர்பான கலந்துரையாடலின் போது வருமான வரி மற்றும் உழைப்பிற்கான வரி என்பவற்றை இந்த தனிநபர் வருமான வரிக்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பாகத் திட்டமிடுவதற்காக கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது.
இலங்கை அரசின் யோசனை உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் யோசனை உள்ளது. அவை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.
2025இல் இந்த வரியில் மற்றம் செய்வதாயின் செய்ய வேண்டும். அரச வருமானம், தலா தேசிய வருமானம் என்பவற்றை நூற்றுக்கு 15%அல்லது அதைவிட அதிகரிக்க வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட நோக்கமாகும்.
நாணய நிதியத்துடன் உடன்பாடு
அதைவிட குறைந்த வருமானத்தை காட்டுவதற்கு யாராலும் முடியாது. அப்படி செய்தால் நாடு மீண்டும் பின்னடையும். நாடு பின்னடையாது முன்னெடுத்துச் செல்வதற்காகவே நாணய நிதியத்துடன் இந்த விதிகள் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதுடன் நாட்டை பின்னடைய விடாது தொடர்ந்தும் கொண்டு செல்வதற்காகவே ஆகும்.
அவ்வாறு இல்லாமல் யார் நாட்டை பொறுப்பெடுத்தாலும் இந்த உலகத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களுக்கு இடையூறாக செயற்பட்டால் மாத்திரமே இரண்டு வாரங்கள் அல்லது ஒரு மாதம் நாட்டை கொண்டு செல்ல முடியும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெளிவுபடுத்தினார்.