அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள (Department of Agriculture) அதிகரரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, ஒழுங்கமைக்கப்பட்ட விவசாய திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
நெல் கொள்வனவு
மேலும் நிர்ணய விலை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அரிசியின் விலையை மாற்றுவது நியாயமல்ல எனவும் குறிப்பிட்டார்.
விவசாயிகளிடம் இருந்து அரிசியை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கும்,
நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குவதற்கும் முறையான பொறிமுறை அவசியம் என தெரிவித்தார்.
அரிசியின் விலை செயற்கையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், நீண்டகால உத்தரவாத விலைகளை நடைமுறைப்படுத்தாததன் காரணமாகவே இந்த விலை ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
உள்ளீட்டு விலைகளை குறைத்தல்
மேலும் அரிசியை சேகரித்து வைக்கும் மூன்றாம் தரப்பினர் குறித்து கவனம் செலுத்துமாறு விவசாய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக உள்ளீட்டு விலைகளை குறைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க வர்த்தகர்கள் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.