“பொதுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்று முன்வைக்கப்பட்ட
குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
செய்யப்பட்டமை எவ்வாறு அரசியல் பழிவாங்கலாகும்? இது தொடர்பான சட்ட
நடவடிக்கைகள் நீதிமன்றத்தால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். எந்தவொரு
இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர நிறுவனமோ ரணிலை விடுவிக்குமாறு அரசுக்கு
அழுத்தம் கொடுக்கவில்லை.”என்று சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித
ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத்
அவர் தெரிவித்தார்.
மேலும் குறிப்பிடுகையில்,
“ஜனாதிபதி ஒருவர் உள்நாட்டுக்குள் மரண வீடொன்றுக்குச் செல்வதற்கும் வேறு
இடங்களுக்குச் செல்வதற்கும் வெளிநாடொன்றுக்குப் பிரத்தியேக விமானத்தில்
செல்வதற்கும் வேறுபாடு உண்டு.
எனவே, இவை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்த முடியாது.
வேறுபாடு உண்டு
அரச
உத்தியோகத்தர்களுக்குக் கூட அரச வாகனங்களைப் பயன்படுத்துவதற்குச் சில
வரைமுறைகள் காணப்படுகின்றன.
சுற்றறிக்கை ஊடாகவும் அது தொடர்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்மை பொதுச் சொத்துக்களை
முறைகேடாகப் பயன்படுத்தினார் என்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின்
அடிப்படையிலாகும்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பில் அளிக்கப்பட்ட
முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே முன்னாள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார்.
பின்னர் வழக்கு விசாரணைகளின் போது மருத்துவக் காரணிகள் உள்ளிட்டவற்றை
அடிப்படையாகக் கொண்டு பிணை வழங்குவதற்கும், சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தும்
முன்னெடுத்துச் செல்வதற்கும் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்மானிக்கப்படும்.
இது தொடர்பில்
சிக்கல்கள் காணப்படுகின்றன என்று எண்ணுபவர்கள் மேன்முறையீடுகளின் ஊடாகவும்
தமக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கை வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டம் அனைவருக்கும் சமமாகப்
பயன்படுத்தப்படவில்லை.
அதிகாரத்தின் அடிப்படையில் சட்டம் வேறுபாட்டுடனேயே
நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது அவ்வாறான நிலைமை இல்லை என்பது இந்த
வழக்கின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆலோசனை
எனவே, இது அரசியல் பழிவாங்கலோ,
தனிப்பட்ட பழிவாங்கலோ அல்லது ஏகாதிபத்திய அரசமைப்பு நடைமுறையோ அல்ல.
அரசமைப்பு ரீதியிலான ஏகாதிபத்தியத்துக்குச் செல்வதெனில் முதலில் அரசமைப்பில்
அதற்கமைய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
2020இல் அவ்வாறான நிலைமைகள்
காணப்பட்டன.
இதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளமை அரசுக்கு எந்த வகையிலும் சவால்
அல்ல. இவர்கள் அனைவரும் யார் என்பதை மக்கள் தற்போது புரிந்து கொண்டிருப்பர்.
எனவே, இது எமக்கு மகிழ்ச்சியான விடயமே.
விசாரணைகளுக்கமையவே சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதா? இல்லையா? என்பது
தொடர்பில் தீர்மானிக்கப்படும். இந்த வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனை குறித்த
விவகாரம் தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்கும்.
பொதுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துகின்றமை சட்டத்தை மீறும்
செயலாகும். அது எவ்வாறு அரசியல் பழிவாங்கலாகும்? பொதுச் சொத்துக்கள்
முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டால் அவர்களுக்கு எதிராக தகுதி தராதரம் பாராமல்
சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர நிறுவனமோ ரணிலை விடுவிக்குமாறு
அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஒரு சில நபர்களே அவ்வாறு தெரிவித்துக்
கொண்டிருக்கின்றனர்.”என தெரிவித்தார்.