வடமராட்சிக் கிழக்கு, பச்சிலைப்பள்ளி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் உள்ளிட்ட
பகுதிகளிலுள்ள 5 ஆயிரத்து 941 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் எண்ணத்தில் தேசிய
மக்கள் சக்தி அரசு மூன்று மாதங்களுக்கு முன்னர் விடுத்த வர்த்தமானி அறிவித்தலை
நேற்று நள்ளிரவு மீள பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னைய வர்த்தமானி அறிவித்தலை விலக்கும் புதிய வர்த்தமானி பிரகடனத்தில் கூட
அரசு பொடி வைத்துத்தான் அதனைச் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
‘முன்னைய வர்த்தமானி அறிவித்தல் அரசின் கொள்கை முடிவுக்கு அமைய இல்லாததால் இரத்துச் செய்யப்படுகின்றது’ என்று புதிய அறிவித்தலில் குறிப்பிட்டுள்ள அரசு
‘மேற்படி காணிகள் உள்ள பகுதிகளில் நிலவும் குறிப்பிட்ட பிரச்சினைகளைக்
கருத்தில் கொண்டும் இந்தக் காணிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உரிமை
கோருபவர்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்குவதற்காகவும் இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது’ என்றும் தெரிவித்துள்ளது.
புதிய அறிவித்தல்
அதன் அர்த்தம், இந்த விடயத்தை இப்போதைக்கு இரத்துச் செய்கின்றோம்,
தேவைப்பட்டால் போதிய வாய்ப்பை வழங்கி காணி கபளீகர நடவடிக்கையை புதிய
அறிவித்தல் மூலம் முன்னெடுக்க நடவடிக்கை எடுப்போம் என்பதுதான் என சட்ட
வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மூல – முதல் – வர்த்தமானி அறிவித்தல் மார்ச் 28ஆம் திகதி வெளியிடப்பட்டது.
அதன்படி மூன்று மாத காலத்தில் – இன்று ஜூன் 28ஆம் திகதி – மேற்படி காணிகளில்
சான்றாதாரங்கள் மூலம் உரிமைகள் நிலைநாட்டப்படாதவற்றைச் சுவீகரிக்கும் அதிகாரம்
அரசுக்கு வந்துவிடும் என்ற நிலைமையில் நேற்றுக் கடைசி நேரத்தில் அந்த
வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக உயர்நீதிமன்றம் தடை
உத்தரவு வழங்கியிருந்தது.
இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி
எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த வழக்கின் மீது இந்த உத்தரவு
வழங்கப்பட்டிருந்தது.
காணி சுவீகரிப்பு
அந்தப் பின்புலத்திலேயே இப்போது மூல வர்த்தமானியைக் கைவாங்கும் புதிய
வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவில் வெளியாகியுள்ளது.

ஆனால் புதிய அறிவித்தலின் பிரகாரம் இந்தக் காணிகளுக்கு உரிமை கோரக்
கூடியவர்களுக்கு போதிய வாய்ப்பை வழங்கி அதன் பின்னர் காணி சுவீகரிப்பு எந்தச்
சமயத்திலும் முன்னெடுக்கப்படலாம் என்ற விவரம் உள்ளடங்கி இருப்பது
குறிப்பிடத்தக்கது.


