தேசிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவிக்க சொத்துக்கள் இல்லாததால் சங்கடப்படும் நேரங்கள் உள்ளதாக பிரதி பொது பாதுகாப்பு அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பாக கடந்த சில நாட்களாக தொடரும் சர்ச்சைளுக்கு அரச ஊடகமொன்றில் பதில் அளிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சொத்துக்கள் இல்லாத உறுப்பினர்கள் சொத்து அறிக்கைகள் நிரப்பும் போது அவற்றில் கோடு ஒன்றை கீறி விடுமாறு தான் கூறியதாகவும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
சொத்து அறிக்கை
எனவே சொத்து அறிக்கைகள் சமர்பிப்பதில் அவர்களுக்கு எந்த பயமும் இல்லை என்றும் பிசாசுக்கு பயந்திருந்தால் சுடுகாட்டில் வீடு கட்டியிருக்கமாட்டோம் எனவும் சிங்கள பழமொழியொன்றையும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தான் யதார்த்தத்தை அறிந்து தனது சொத்து அறிக்கைகளை சமர்ப்பித்ததாகவும், பொதுமக்களை அவற்றை கவனமாகப் படிக்குமாறும் சுனில் வட்டகல வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அமைச்சர் பதவியை ஏற்பதற்கு முன்பு தனக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்கள், பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்துக்கள், தனது தொழில் வாழ்க்கையின் மூலம் சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் உறவினர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து பெற்ற அனைத்து சொத்துக்கள் ஆகியவற்றையும் எந்த மறைக்கலும் இல்லாமல் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

