அரச அங்கீகாரம் பெற்ற ஊழியர்களை கருத்திற் கொள்ளாமல் வழங்கப்பட்ட நியமனங்கள் காரணமாக அரச ஊழியர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் அதிகரித்தது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
17 இலட்சம் அரச ஊழியர்களாக அதிகரித்துள்ளனர்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பாடசாலைகளில் கல்வி கற்றுக் கொடுக்கும் பட்டதாரிகளைப் பற்றிப் பேசியதைப் போன்று பட்டதாரிகளின் முழுப் பிரச்சினையையும் நாம் பேச வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) இரண்டு தடவைகள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) ஆகியோர் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil premjayantha) மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நியமனங்கள் வழங்கப்படும் போது பிரதேச செயலக அலுவலகங்களில் ஒரு நாற்காலியில் இரண்டு மூன்று பேர் அமர்ந்தனர். அப்போது அரச அங்கீகாரம் பெற்ற ஊழியர்களைக் கருத்தில் கொள்ளாமல் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன. இதனால், 17 இலட்சம் அரச ஊழியர்களாக அதிகரித்துள்ளனர்.
எமது நாட்டில் உள்ள 10 இலட்சம் அரச ஊழியர்களைக் கொண்டு இந்த தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என முகாமைத்துவ சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தனது கொள்கைகளைப் பற்றிப் பேசுகின்றார். அதிகாரம் கிடைத்தால் எதிர்காலத்தில் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை வழங்குவாரா? இல்லையா? என்பதை எதிர்க்கட்சித் தலைவரிடம் இருந்து அறிய விரும்புகிறேன்.
இது பற்றி தேர்தல் பிரகடனத்தில் இடம்பெறுமா? இல்லையென்றால், அது பற்றி இந்த நாடாளுமன்றத்தில் தெரிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.