அரசியல் உரிமைகளை நாடாளுமன்றம் ஊடாக வென்றெடுக்க கூடிய நபர்களுக்கே நாம்
வாக்களிக்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு
இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு
குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், “இலங்கை நாட்டு மக்களாகிய நாம் மீண்டுமொரு தேர்தலை எதிர்நோக்கி நிற்கின்றோம்.
800க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள்
ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு இப்போது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள
இருக்கின்றோம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
வடக்கு மாகாணத்தில் வன்னி தேர்தல் மாவட்டம் மற்றும் யாழ்ப்பாணத் தேர்தல்
மாவட்டம் என இரண்டிலும் சேர்த்து குறித்தொதுக்கப்பட்டுள்ள 12 ஆசனங்களுக்காக 45
அரசியல் கட்சிகளும் 46 சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன.
வேட்பாளர்கள்
என்ற அடிப்படையில் 800க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து வருகின்ற இந்த நாடாளுமன்றத் தேர்தலானது இலங்கை
முழுவதும் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதியாகிய தமிழர் தாயகப் பகுதியில் பலத்த
எதிர்பார்ப்புகள் நிறைந்த தேர்தலாக அமைந்துள்ளது.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால்
உரிமை மறுப்புக்கு இலக்கான சிறுபான்மை மக்களாகிய நாம் நமது அனைத்து வகையான
உரிமைகளையும் பெறுவதற்குரிய ஆகக்கூடிய வழிமுறை அரசியல் தான்.
இந்த அரசியல்
பிரதிநிதிகளாக போட்டியிடுகின்ற அனைவரும் அதன் கனதியை உணர்ந்தவர்களா? என்பது
கேள்விக்குறியே.
மாறிவரும் அரசியல் பொருளாதார சமூக சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்தல் தொடர்பான
சமகால அரசியல் தொடர்பான நமது பார்வையிலும் கண்ணோட்டத்திலும் மாற்றங்கள் ஏற்பட
வேண்டும்.
ஒளிமயமானதொரு எதிர்காலத்தை நமக்குக் கொண்டுவரக்கூடிய தீர்மானமிக்க
தேர்தலாக இது அமைவதற்கு நாம் எல்லோரும் நமது வாக்குரிமையை பயன்படுத்துவோம்.
நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் மிகுந்த பொறுப்புணர்வோடு
செயல்படுவோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை
தேர்தல் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.