அனுர (Anura Kumara Dissanayake) ஆட்சியில் சமஸ்டி இருக்கிறது என தமிழ் மக்களை ஏமாற்றிய சுமந்திரன் (M. A. Sumanthiran) சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவு வழங்கிவிட்டு மக்களுக்கு பொய் விளக்கம் கூறுவார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் (S. Kajendran) தெரிவித்துள்ளார்.
யாழில், அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சுமந்திரன் என்கின்ற நபர் யார் என்பது தொடர்பில் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். நல்லாட்சி அரசாங்கத்தில் ஐ.நாவில் கால அவகாசம் பெற்றுக் கொடுப்பதற்கு சம்பந்தர் தலைமையிலான அணியில் சுமந்திரன் அரசாங்கத்தை காப்பாற்றினார்.
புதிய அரசியல்
அது மட்டுமல்லாது புதிய அரசியல் அமைப்பை உருவாக்குகிறோம் எனக் கூறிக்கொண்டு அனுர ஆட்சியில் சமஸ்டி இருக்கிறது என மக்களுக்கு பொய்களை கூறிவந்தவர்.
அதேபோன்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தை திசைதிருப்பி இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புக்கு தமிழ் மக்கள் உள்ளக விசாரணையை வலியுறுத்தி போராட்டம் செய்தார்கள் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தவர்.
அப்போது எமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் தெளிவாக குறிப்பிட்டார், எமது போராட்டம் சர்வதேச விசாரணையை கோரி இடம்பெற்றதே அல்லாமல் உள்ளக விசாரணையை கோரி இடம்பெறவில்லை என அழுத்தம் திருத்தமாக கூறினார்.
ஒற்றையாச்சி
இந்த விடயம் இந்த போராட்டத்தில் ஏற்பாட்டாளர்களில் ஒருவராக இருந்த வேலன் சுவாமியிடம் நாங்கள் தெரிவித்த போது சுமந்திரன் இவ்வாறாக பேசினாரா என கோபப்பட்டார்.
ஆனால் ஊடக சந்திப்பில் சுமந்திரன் கூறிய விடயங்களை மறுத்துப் பேச தயங்கிவிட்டார்.
இவ்வாறு பொய்களை உரைத்த சுமந்திரன் தற்போது தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வினை கேட்கும் நிலையில் ஒற்றையாச்சி அரசியலமைப்பை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொண்ட சஜித் பிரேமதாசவுக்கு தமிழரசு ஆதரவு வழங்குவதாக சுமந்திரன் அறிவித்திருக்கிறார்.
தமிழ் மக்களை ஏமாற்றி சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றனர்.
தமிழ் மக்களின் தாயகம்
இந்த ஏமாற்றத்தின் ஒரு பகுதியாக தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை வழங்கி தமிழ் மக்களின் தாயகம் தேசியம், சுய நிர்ணய உரிமையை ஒற்றை ஆட்சியின் கீழ் மண்டியிட வைப்பதற்கான முயற்சியாக சஜித்தை ஆதரித்துள்ளனர்.
ஏற்கனவே புதிய அரசியலமைப்புக்கான வேலைத்திட்டங்கள் முடிவுற்ற நிலையில் அதனை நிறைவேற்றுவதற்கான முன்னேற்பாடாக தெற்கு கட்சிக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கேற்ற வகையில் செயற்பாடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழர்களை அடி பனிய வைப்பதற்கான வேலை திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
ஆகவே தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் தேசிய நீக்கத்தை மேற்கொள்வோர் தொடர்பில் அவதானமாக இருப்பதுடன் அவர்களுக்கு தகுந்த பாடத்தை தமது வாக்குகளால் வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.