புதிய இணைப்பு
அதிபரின் பதவிக் காலம் தொடர்பில் விளக்கமளிக்கும் வரை அதிபர் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் ஒரு இலட்சம் ரூபா நீதிமன்றக் கட்டணத்திற்கு உட்பட்டு நிராகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு மாதத்திற்குள் நீதிமன்ற கட்டணத்தை செலுத்த மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
சிறிலங்கா அதிபரின் பதவிக் காலம் தொடர்பாக உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு இன்று (08) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மனுவை பரிசீலிப்பதற்காக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு அண்மையில் பெயரிடப்பட்டது.
தாக்கல் செய்யப்பட்ட மனு
அதிபரின் பதவிக்காலம் முடிவடையும் திகதிகள் தொடர்பில் உயர் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை தற்போது திட்டமிடப்பட்டுள்ளவாறு அதிபர் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி குறித்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபர், சி.டி.லெனவவினால் (C.D. Lenawa) கடந்த புதன்கிழமை (03) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால் சட்டத்தின் முன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெப்ரல் (PAFRAL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.