இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னரே ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க(Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் வாரம் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி கிடைக்கப்பெறும். பரிஸ் கிளப் உட்பட சீனாவுடன் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.
வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டோம் என்ற செய்தியை நாட்டு மக்கள் கொண்டாட முடியும்.
இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டது என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னரே ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.
எதிர்வரும் மாதம் முதல் அல்லது இரண்டாம் வாரமளவில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதை அவரிடம் வலியுறுத்தியுள்ளோம். நாட்டுக்காக அவர் சிறந்த தீர்மானம் எடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
சுதந்திரத்துக்கு பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்களை காட்டிலும் இந்த ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கது.
இனி வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்கள் பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்தியதாக காணப்படும். பாரம்பரியமான அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டு மக்கள் அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
நபர்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்காமல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள செயற்திட்டங்களினால் நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
வங்குரோத்து நிலையில் இருநு்துமீண்டு விட்டோம் என்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர் நாட்டின் கடன் நிலைமை குறித்து சர்வதேசம் நம்பிக்கைக் கொள்ளும் என குறிப்பிட்டார்.