சிறிலங்கா (Sri lanka) நாடாளுமன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து அதிபர் இன்று (18) நாடாளுமன்றத்தில் தெரிவிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது தவணைக்கான அங்கீகாரம் தொடர்பிலும் அதிபர் ரணில் கருத்து வெளியிட உள்ளார்.
ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம்
இதேவேளை ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் அதிபர் தலைமையில் இன்று காலை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வாரம் நாடாளுமன்ற பணிகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாரம் காலை 09.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடியுள்ளதுடன், இன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுலா சட்டத்தின் கீழும், அரச காணி கட்டளைச் சட்டத்தின் கீழும், விளையாட்டு ஊக்கமருந்து தடைச் சட்டத்தின் கீழும் பல விதிமுறைகள் விவாதிக்கப்பட உள்ளன.
சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு
இதேவேளை, அரசியலமைப்பு பேரவை அதன் தலைவரும் சபாநாயகருமான மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தலைமையில் இன்று கூடியுள்ளது.
சட்டமா அதிபர், அதிபர் சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினத்தின் (Sanjay Rajaratnam) சேவை நீடிப்பு தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 06 மாத கால சேவை நீடிப்பு வழங்க அதிபர் ரணில் விக்ரமசிங்க சிபாரிசு செய்திருந்தமையினால் அரசியலமைப்பு சபையின் அங்கீகாரம் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/IScMCcakZNU