அரச ஊழியர்களுக்கான நியாயமான அடிப்படை சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் சம்பள முரண்பாடுகளை மூன்று வருடங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான முன்மொழிவுகள் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
அநுராதபுரம் (Anuradhapura) மாவட்டச் செயலகத்தில் இன்று (26) நடைபெற்ற அனுராதபுர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவையை பலப்படுத்த..
பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர தெரிவித்தார்.
தற்போதுள்ள அரச சேவையில் பிரஜைகள் திருப்தியடையவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்க சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக பிரஜைகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்க எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவையை வலுப்படுத்துவது மற்றும் அரச சேவைக்கான செலவை நிர்வகிப்பதன் அவசியம் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில், அரச சேவையில் காணப்படும் அத்தியாவசியமான 30,000 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பான நிதி ஒதுக்கீடுகளுக்கான முன்மொழிவுகளை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.“
மேலும், தொழில்நுட்ப காரணங்களால் நேர்முகப் பரீட்சைகள் தாமதமாகக்கூடிய வெற்றிடங்கள் குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டதுடன், ஒருங்கிணைந்த அரச சேவை மூலம் மனிதவளத்தை சரியான முறையில் முகாமைத்துவம் செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.