புதிய இணைப்பு
வியட்நாமுக்கு (Vietnam) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இன்று (04) அதிகாலை அந்நாட்டு விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இன்று முதல் 6 ஆம் திகதி வரை வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கை ஜனாதிபதி மற்றும் குழுவினரை வியட்நாமின் வெளியுறவு பிரதி அமைச்சர் நுயென் மன் குவோங், இன மற்றும் மத விவகார பிரதி அமைச்சர் நோங் தி ஹா, இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டம் மற்றும் வியட்நாமிற்கான இலங்கை தூதுவர் ஆகியோர் வரவேற்றனர்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி இன்றிரவு (03) நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
குறித்த தகவல் வெளியுறவு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
இந்த அரச விஜயத்தின் போது ஜனாதிபதி, வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், கம்யூனிஸ கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலரையும் சந்திக்கவுள்ளார்.

மேலும், ஹோ சி மிங் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதன்போது சிறப்புரை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இரு தரப்பினருக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடவும், வர்த்தக சமூகத்தினரைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்லுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழு ஒன்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இந்த அரச விஜயத்தில் பங்கேற்க உள்ளனர்.

