தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின்
உள்நாட்டு பயணம் தொடர்பான தகவல்களை கோரி முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு
பதிலளித்துள்ள ஜனாதிபதி செயலகம் அது தொடர்பான தகவல்களை வழங்க மறுத்துள்ளது.
ஜினத் பிரேமரட்ன என்பவரால் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த 4 ஆம்
திகதி ஜனாதிபதியின் உள்நாட்டு பயணங்கள் தொடர்பான தகவல்களை கோரி
விண்ணப்பிக்கப்பட்டது.
அதற்கமைய, கடந்த 27ஆம் திகதியிடப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பதிலில்,
கோரப்பட்ட விவரங்கள் ஜனாதிபதி தொடர்பான பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த
தகவல்களுடன் நேரடியாக தொடர்புடையவை என்ற அடிப்படையில், தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தின் பிரிவு 5 (1) (b) (i) இன் கீழ் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
மேன்முறையீடு
ஜினத் பிரேமரத்னவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், சட்டத்தின் பிரிவு 31 (1) இன்
கீழ், 14 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யலாம் என்று மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தகைய மேன்முறையீடுகளை கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் உள்ள ஜனாதிபதியின்
சிரேஷ்ட மேலதிக செயலாளர் கே. பிரசன்ன சந்தித்துக்கு அனுப்ப வேண்டும் அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.