சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிருவாகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச, ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் விரிவான விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த விசாரணை, சமூக ஆர்வலரான தனீஷ் அலி சமர்ப்பித்த முறைப்பாட்டிற்கு அமையவே தொடங்கப்பட்டுள்ளது.
சிறப்பு விசாரணை
இந்த விசாரணைக்கு அமைவாக, 2023 செப்டம்பர் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட சிறப்பு கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தி விரிவான வாக்குமூலம் அளிப்பதற்காக, தனீஷ் அலியை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் 31 ஆம் திகதி உரிய ஆவணங்களுடன் ஆணைக்குழுவின் சிறப்பு விசாரணைப் பிரிவிற்கு வருகை தருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் திலங்க சுமதிபாலவின் தலைமையிலான காலத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலும் இந்த முறைப்பாட்டின் மூலம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, அப்போதைய சிறிலங்கா கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் சூதாட்டக்காரர்களுக்கும் இடையே நிலவியதாகக் கூறப்படும் சட்டவிரோத தொடர்புகள், போட்டி நிர்ணயக் குற்றச்சாட்டுகள் மற்றும் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் தனீஷ் அலி ஆணைக்குழு முன்னிலையில் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/probe-into-sri-lanka-cricket-corruption-1784681290

