‘பருத்தித்துறை நகரைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில், பருத்தித்துறை
நகரில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி எதிர்வரும் 25ஆம் திகதி
கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
பருத்தித்துறை நகரசபை மாநாட்டு மண்டபத்தில் பருத்தித்துறை நகரசபை தவிசாளர்
டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்தப் போராட்டம் தொடர்பில்
கலந்துரையாடப்பட்டுள்ளது.
பொது அமைப்புகள் ஒன்றிணைவு

இதனடிப்படையில் பருத்தித்துறை துறைமுகப் பகுதி மற்றும் வெளிச்ச வீட்டடியில்
அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி பொது அமைப்புகளை
ஒன்றிணைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
பருத்தித்துறை நீதிமன்றத்துக்குச் சொந்தமான நிலம் மற்றும் தபால்
நிலையத்துக்குச் சொந்தமான கட்டடம் என்பவற்றை ஆக்கிரமித்து பருத்தித்துறை
துறைமுகப் பகுதியில் பெரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், தபால்
நிலையம் பிறிதொரு கட்டடத்தில் இயங்கி வருவதுடன் பருத்தித்துறை நீதிமன்ற
வளாகத்தை பருத்தித்துறை நகருக்கு வெளியே இடம்மாற்றுவதற்கு முயற்சிகள்
இடம்பெற்று வருகின்றன.

முன்வைக்கப்படும் கோரிக்கை
இதனால், பருத்தித்துறை நகரின் முக்கிய அடையாளங்களான நீதிமன்றம், தபால்
நிலையம், வெளிச்சவீடு ஆகியவற்றை அந்த அந்த இடங்களிலேயே உறுதிப்படுத்தும்
வகையிலும், குறித்த பகுதிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ,
கடற்படை முகாம்களை அகற்றுமாறு கோரியுமே இந்தப் போராட்டம்
முன்னெடுக்கப்படவுள்ளது.

