மாகாண சபை முறைமையை நீக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை அரசாங்கம் எடுக்கவில்லை என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க (Bimal Ratnayake) அறிவித்துள்ளார்.
மாகாண சபை முறை நீக்கப்பட உள்ளதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) கூறியுள்ள கருத்து தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்றையதினம் (03.12.2024) நாடாளுமன்றத்தில் கேட்டபோதே சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, புதிய அரசியலமைப்பு மூன்று வருடங்களின் பின்னரே கொண்டுவரப்படும். அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாட போதுமான கால அவகாசம் உள்ளது.
புதிய அரசியலமைப்பு
புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறை தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு இருக்காது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஏனையோர் சொல்வதைக் கேட்டு முறையற்ற சந்தேகங்களை எழுப்ப வேண்டாம்.
இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் இது விடயமாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடல் ஒன்றுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுடனும் அன்று ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு ஒழுங்குபடுத்தி தருகிறோம். அதன்போது இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றார்.