பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு, யாராவது உதவியிருந்தால் தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று (06) கலந்து கொண்டு காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியேட்சகர் புத்திக மனதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்களிடம் வேண்டுகோள்
இதன்படி, தலைமறைவாகியுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு அவர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை, தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக தற்போது பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது சட்டத்திற்குக் கீழ்ப்படியாமல் தலைமறைவாக உள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.
சிறப்பு சலுகை
நீதிமன்ற உத்தரவை மீறி தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட அதே நடைமுறையின் கீழ், முன்னாள் காவல்துறை மா அதிபரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவருக்கு எந்த சிறப்பு சலுகைகளையும் காவல்துறையினர் வழங்க நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்றும் புத்திக மனதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
வழக்கத்திற்கு மாறாக முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.