முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நாளையதினம் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு 262 லட்ச ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்திய சம்பவத்தில் சந்தேக நபராக ராஜித சேனாரத்ன பெயரிடப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணையில் இருந்து தலைமறைவாகியிருந்த அவர், நாளை நீதிமன்றில் முன்னிலையாவார் என அவரது சட்டத்தரணி உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
பிடியாணை
இது தொடர்பில் தெரிய வருகையில்,
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை தொடர்பில் கொழும்பு உயர் நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
இதன்படி குறித்த பிடியாணையை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் அறிக்கை அனுப்பியுள்ளது.
ராஜித சேனாரத்ன
இதன்படி ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அவரது சட்டத்தரணிகள் தற்காலிக இடைக்கால தடை உத்தரவை கோரிய போதிலும், உயர் நீதிமன்றம் அத்தகைய உத்தரவைப் பிறப்பிக்கவில்லலை என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, குறித்த நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு வழங்கப்பட்ட அறிவிப்பின்படி, நாளை (29) நிச்சயமாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாவதாக அறிவித்துள்ளார்.
இதன்படி குறித்த மனு செப்டம்பர் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.