கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) மற்றும் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் பாவத்தின் பங்காளியாக ஜனாதிபதி செயற்படுகிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்(Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய(18.06.2024) அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று
அவர் மேலும் உரையாற்றியதாவது,
“கோவிட் பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டமை குறித்து ஜனாதிபதி உரையாற்றினார். துறைசார் நிபுணர்கள் வழங்கிய ஆலோசனைகளுக்கு அமையவே உடல்கள் தகனம் செய்யப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.
கோவிட் பெருந்தொற்றுத் தாக்கத்தில் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது ஜனாஸாக்களை தகனம் செய்ய வேண்டாம், சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய நல்லடக்கம் செய்யுங்கள் என்று அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பலமுறை வலியுறுத்தினோம்.
இவ்விடயம் குறித்து ஆராய்வதற்கு தொழில்நுட்ப குழுவும், துறைசார் நிபுணர்களின் குழுவும் நியமிக்கப்பட்டது. தொழில்நுட்ப குழுவில் தலைவராக கோட்டாவுக்கு நெருக்கமான சன்ன பெரேரா என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்த குழுக்களின் மீது நம்பிக்கை இல்லை ஆகவே துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவை நியமியுங்கள் என்று அப்போதைய ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம். இதற்கமைய கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடாதிபதி ஜெனிபா பெரேரா தலைமையில் துறைசார் குழு நியமிக்கப்பட்டது.
சர்வதேச சுகாதார தாபனம் முன்வைத்துள்ள பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய உடல்களை அடக்கம் செய்யலாம் என்று இந்த குழு அறிக்கை சமர்ப்பித்தது.
எனினும், கோட்டாபய ராஜபக்சவும், அவரது அமைச்சரவையும் கவனத்திற் கொள்ளவில்லை. இனவாத ரீதியில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கினார்.
உலக சுகாதார ஸ்தாபனம் சமர்ப்பித்த அறிவுறுத்தல்களை புறக்கணித்து முஸ்லிம் சமூகத்தினர் பழிவாங்கப்பட்டார்கள்.
தற்போது ஜனாதிபதி தொழில்நுட்ப குழுவின் தீர்மானம் என்று குறிப்பிட்டு பொதுஜன பெரமுனவை தூய்மைப்படுத்த முயற்சிக்கிறார். பொதுஜன பெரமுனவின் ஆதரவில் இருப்பதால் இவரும் பாவத்தில் பங்காளியாகியுள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.