Courtesy: Sivaa Mayuri
கோவிட் (Covid) பரவலின் போது முஸ்லிம்கள் மற்றும் ஏனைய மத குழுக்களின் தகனம் செய்வதற்கு பரிந்துரைத்தவர்களின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆராய, ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நிறுவவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அறிவித்துள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள அமைப்பின் தலைமையகத்திற்குச் சென்ற ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
உடனடி விசாரணை
அத்துடன், நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து முக்கியஸ்தர்களுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது வேலைத்திட்டத்தை தொடர்வதற்கான ஆணையைப் பெறுவதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பாலஸ்தீன அரசு தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அதனை தொடர்ந்து ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென் மாகாணத்தில், சுற்றுலா நோக்கங்களுக்காக, நீண்ட கால குத்தகைக்கு இஸ்ரேலியர்கள் நிலம் மற்றும் சிறிய ஹோட்டல்களை கையகப்படுத்துவது தொடர்பான முறைப்பாடுகள் குறித்து இதன்போது ஜனாதிபதியிடம் முறையிடப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.