ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதையோ, விமர்சிப்பதையோ தவிர்த்து, நாடு முன்னேறவும், மீண்டு வரவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
குருநாகலில் (Kurunegala) இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தனது உரையில், மக்களிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறையின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
பொய்யான வாக்குறுதிகள்
மேலும், “ நாங்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம், மீண்டும், பொய்யான வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. வரிகள் குறைக்கப்படும் என்றெல்லாம் கூறுகிறார்கள்.
இவை எதுவும் வெற்றிபெறாது. வரியைக் குறைத்தால் என்ன ஆகும்? நமது வருவாய் குறையும், இதனால் சர்வதேச நாணய நிதியம் எங்களுக்கு ஆதரவளிக்காமல் போகும். எனவே, நாடானது மீண்டும் அதே பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொள்ளும். ” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு உற்பத்தி
குறிப்பாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், பொருளாதார விவகாரங்களில் ஏமாற்றுதல் மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றமை தொடர்பாகவும் எச்சரித்துள்ளார்.
அத்துடன், “நாட்டின் பொருளாதாரம் பற்றி பொய் கூறமுடியாது, பொருளாதாரம் பற்றிய பொய்களால் மக்களை ஏமாற்ற முடியாது” என்று கூறியுள்ளார்.
அந்தவகையில், கடந்த காலங்களில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தவறுகளை இழைத்துள்ளனர், இது பாரிய வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்பதை ஒப்புக்கொண்ட ரணில் விக்ரமசிங்க, இந்த கடந்த கால தவறுகளில் தங்கியிருப்பது அல்லது “ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, ஒன்றிணைந்து செயல்படுவோம்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.