Courtesy: Sivaa Mayuri
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தேர்தலுக்கு முகம் கொடுக்காமல் அரசியல் அதிகாரத்தை பலப்படுத்துவதற்கான இறுதி முயற்சியை மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ்(G. L. Peiris) குற்றம் சுமத்தியுள்ளார்.
பாலின சமத்துவ யோசனை மீதான உயர்நீதிமன்ற நிர்ணயம் தொடர்பில், நாடாளுமன்றத்தில், நீதித்துறை மீது ஜனாதிபதி மேற்கொண்ட கடும் விமர்சனங்கள், மிகவும் ஆபத்தான மற்றும் கொந்தளிப்பான சூழ்நிலையை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய பீரிஸ், அரசியலமைப்பிற்கு முரணாக ஜனாதிபதி விக்ரமசிங்க தனது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை எப்படியாவது ஒத்திவைக்க ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு செப்டம்பர் -அக்டோபர் மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்தநிலையில் ரணில்- ராஜபக்ச அரசாங்கத்தை முன்னெடுக்கும், ஜனாதிபதி விக்ரமசிங்கவை அடுத்த மூன்று மாதங்களுக்கு 8,750 மில்லியன் ரூபாவை செலவழிக்க அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய முன்மொழிவுக்கு நாடாளுமன்றம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்ததாக பேராசிரியர் பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலஞ்சம் வழங்குவதன் ஊடாக நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள விக்ரமசிங்க முயற்சிப்பதாகவும், ஜனாதிபதி தேர்தலை பிற்போடுமாறு கோருவதாகவும் முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு பதவி நீடிப்பு வழங்குவது, முழு நீதித்துறை அமைப்பையும் அழித்துவிடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஜி.எல்; பீரிஸ் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.