முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) அறிவித்து தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) நேற்றையதினம் (21) விடுத்த அறிக்கையொன்றின் மூலம் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை
சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற ஆசனங்களில் ஒன்றிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்கவை (Ravi Karunanayake) நியமித்தமை தொடர்பில் சர்ச்சைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் நேற்று முன்தினம் (20), ரவி கருணாநாயக்க தனது கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் என அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்றையும் விடுத்திருந்தார்.
உடன்படிக்கை
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டமை புதிய ஜனநாயக முன்னணியுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு எதிரானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்க பரிந்துரைக்கப்படுவது ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்கப்படவில்லை என்றும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.