இலங்கையில் நடைபெற்று வரும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இனக்கப்பாட்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள சவாலை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும்பண்டார விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சர்வதேச நாணய நிதியம்
“சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட உடன்படிக்கைகள் மற்றும் அது தொடர்பான ஏனைய விடயங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடுவதற்கு தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து அது தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியை உணர்ந்து, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு முதலில் அறிவித்து கோரிக்கை விடுத்தது ஐக்கிய மக்கள் சக்தியே.
அதாவது ஒகஸ்ட் 2020 இல், நாடு திவாலானதாக அறிவிக்கும் முன் நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மறுபரிசீலனை முன்மொழிவுகள்
ஒவ்வொரு அறிக்கையிலும், சாதாரண மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் சூழ்நிலைகள் இருந்தால், மறுபரிசீலனை செய்ய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளையும் நிபந்தனைகளையும் கூறி நாட்டு மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகள் சர்வதேச நாணய நிதியத்தின் உண்மையான யோசனைகள் அல்ல என்பதை நாம் அறிவோம்.
எனவே, எந்த நேரத்திலும் சர்வதேச நாணய நிதியத்துடன் எந்த விதமான கலந்துரையாடலுக்கும் நாங்கள் தயாராக இருப்பதாக உள்ளோம்” என்றார்.
இதேவேளை, ஜனாதிபதியினால் சவாலுக்கு உள்ளான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க இந்த சவாலுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை.