இலங்கையின் முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர், முன்னாள் பிரதிக் குழுத் தலைவர் மற்றும் தற்போது பதவியில் இருப்பவர்கள் தங்களது பதவிக் காலத்தில் எரிபொருளுக்காக செலவிட்ட நிதிச் செலவினங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) இன்று (12) நாடாளுமன்றத்தில் குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்த செலவு அறிக்கைகள் அனைத்தும் நாடாளுமன்ற நிதிப் பணிப்பாளரால் சான்றளிக்கப்பட்டுள்ளதாகவும் சபைத் தலைவர் சுட்டிக்காட்டினார்.
26 மில்லியன் ரூபா மதிப்புள்ள எரிபொருள்
அதன்படி, 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன (Mahinda Yapa Abeywardena) 08 வாகனங்களுக்கு 26 மில்லியன் ரூபா மதிப்புள்ள எரிபொருளைப் பயன்படுத்தியதாக சபைத் தலைவர் தெரிவித்தார்.
மேலும், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச (Ajith Rajapakse) 2023 ஆம் ஆண்டு 06 வாகனங்களுக்கான எரிபொருளுக்காக 14 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதுடன் பிரதிக் குழுத் தலைவர் 04 வாகனங்களுக்கு 7.8 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தியுள்ளதாக பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில், முன்னாள் சபாநாயகர் 9 வாகனங்களுக்கு 33 மில்லியன் ரூபா மதிப்புள்ள எரிபொருளைப் பயன்படுத்தியுள்ளார்.
2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் (தற்போதைய அரசாங்கம் அமைக்கப்படும் வரை), முன்னாள் பிரதி சபாநாயகர் 06 வாகனங்களுக்கு 13 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தியதாகவும், அதே காலகட்டத்தில் முன்னாள் பிரதிக் குழுத் தலைவர் 04 வாகனங்களுக்கு எரிபொருளுக்காக 7.2 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தியதாகவும் சபைத் தலைவர் குறிப்பிட்டார்.
புதிய சபாநாயகரின் எரிபொருள் செலவு
இதேநேரம் தற்போதைய நாடாளுமன்றத்தின் முதல் ஒன்றரை மாதங்களில், புதிய சபாநாயகரின் எரிபொருள் செலவுகள் 123,000 ரூபா எனவும் பிரதி சபாநாயகரின் எரிபொருள் செலவுகள் 45,000 ரூபா எனவும் பிரதிக் குழுத் தலைவரின் எரிபொருள் செலவுகள் 18,000 ரூபா எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
மேலும்,இந்த வருடம் ஜனவரி மாத்தில் சபாநாயகரின் எரிபொருள் செலவு 218,000 ரூபா ஆகவும், பிரதி சபாநாயகரின் எரிபொருள் செலவு 23,000 ரூபா ஆகவும், பிரதிக் குழுத் தலைவரின் எரிபொருள் செலவு 81,000 ரூபா ஆகவும் இருந்தது.
பெப்ரவரி 25 ஆம் திகதி வரை சபாநாயகரின் எரிபொருள் செலவுகள் 123,000 ரூபா என்றும், பிரதி சபாநாயகரின் எரிபொருள் செலவுகள் 25,000 ரூபா என்றும் பிமல் ரத்நாயக்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.