யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி
விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலுக்கு பின்னர்
குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சங்கத்தினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி விலகல்
அறிக்கையின் முழு வடிவம் வருமாறு,
அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூட்டத்தின்
பின்னர் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடாதிபதி தனது பதவியிலிருந்து விலகியதையடுத்து பல்கலைக்கழகம் பற்றிய பல கருத்துக்கள் ஊடகங்களிலும்,
சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் நிலைமை குறித்துக்
கலந்துரையாடும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் விசேட
பொதுக்குழுக் கூட்டம் திங்கட்கிழமை காலை 10 மணிக்குக் கலைப்பீடத்தில்
இடம்பெற்றது.
மீறல்களிலும், வன்முறைகளிலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தினை
பாதிக்கும் வகையிலும், உடைமைச் சேதங்களை விளைவிப்பதிலும் சீரழிவு மிக்க
நடவடிக்கைகளிலும் ஈடுபடும் மாணவர்களிற்கு எதிராகப் பல்கலைக்கழகத்தின்
நிருவாகம் கடந்த காலத்திலே உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை குறித்து
இந்தக் கூட்டத்திலே பல உறுப்பினர்களும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
வகுப்புப் புறக்கணிப்பு
திட்டமிட்ட முறையில் விசாரணைகளிலே தாமதங்கள் ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள்
சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தண்டனைகளில் இருந்து தப்பித்துச் செல்ல
நிர்வாகம் வழிசமைத்துக் கொடுப்பதாகக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
தண்டனைகளின் நோக்கம் மாணவர்களை விரோதிப்பது அல்ல; மாறாக தாம் செய்யும் தவறுகளை
மாணவர்கள் உணர்ந்து எதிர்காலத்திலே செம்மையாகச் செயற்படும் வகையில்
ஊக்குவிப்பதே என்பதுவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை அன்று
பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஓர் அடையாள வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவது
எனவும், நாளை செவ்வாய்க்கிழமை முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பில்
ஈடுபடுவதும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
கோரிக்கைகள்
1. மோசமான செயல்களிலே ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் என பதவி விலகிய கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் முன்வைத்த கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.அவர் தனது பதவி விலகலினை வாபஸ் பெற்று மீளவும் பீடாதிபதிப்
பொறுப்பினை ஏற்பதற்கு உரிய ஒரு சூழலினைப் பல்கலைக்கழக நிர்வாகம்
பல்கலைக்கழகத்திலே ஏற்படுத்த வேண்டும்.
2. மாணவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற
பேரவைக் கூட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் உடனடியாக வாபஸ் பெறப்படல்
வேண்டும்.
3. மோசமான செயல்களிலே ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் உறுதியாக இருக்கும் போதிலும்,
அவற்றினைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வேண்டுமென்றே கால
தாமதங்களை ஏற்படுத்தல், வேண்டுமென்றே நிருவாகத் தவறுகளை இழைத்தல் போன்ற
செயன்முறைகள் மூலம் மீறல்களிலே ஈடுபட்ட மாணவர்கள் தண்டனையில் இருந்து
தப்புவதற்கு நிருவாகம் வழிசமைத்துக் கொடுக்கும் போக்கு உடனடியாக முடிவுக்குக்
கொண்டுவரப்படல் வேண்டும்.
4. இரண்டு மாணவர்கள் கணித புள்ளிவிபரவியல் துறையின் வாயிலில் இருந்த பூட்டினை
உடைத்தமை தொடர்பிலே இடம்பெற்ற விசாரணையினை வேண்டுமென்றே தாமதமடையச் செய்த
பல்கலைக்கழக நிருவாகிகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும். அதே
போன்று கலைப் பீடத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை
வேண்டுமென்றே இழுத்தடிப்போர் மீதும் விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இது
தொடர்பிலே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலையீட்டினையும் கோருவதற்குப்
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
5. கலைப்பீடத்திலும், விஞ்ஞானப் பீடத்திலும் மோசமான செயல்களிலே ஈடுபட்ட
மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதில் இருந்து தவறிய பேரவையின்
வெளிவாரி உறுப்பினர்களின் மீது எமது ஆசிரியர் சங்கம் நம்பிக்கையினை
இழந்துள்ளது. எனவே எல்லா வெளிவாரி உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா
செய்ய வேண்டும். புதிய உறுப்பினர்கள் பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டும்.இது
தொடர்பான சங்கத்தின் விண்ணப்பம் ஒன்று பல்கலைக்கழக மானியங்கள்
ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
மேற்கூறிய ஐந்து கோரிக்கைகளையும் உள்ளடக்கிய கடிதம் ஒன்று பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தருக்கும், எல்லாப் பீடாதிபதிகளுக்கும் ஆசிரியர் சங்கத்தினால், இன்றைய
கூட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு அமைய அனுப்பிவைக்கப்பட்டது.என்றுள்ளது.