நாட்டை முழுமையாக மீட்டெடுக்கவும், மன்னார் மாவட்ட மக்களின் பல்வேறு
பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கவும் தகுதியான ஒருவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
இன்று (31) மன்னார் (Mannar) பள்ளிமுனை வீதியில் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் 3ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் சஜித்
பிரேமதாச (Sajith Premadasa) மன்னாருக்கு விஜயம் செய்ய உள்ளார்.
மன்னார் மக்கள்
மன்னார் மாவட்ட மக்கள் ஒன்றுபட்டு
அவரை வெற்றி பெறச் செய்ய இருக்கிறார்கள். கத்தோலிக்க மக்கள் அதிகமாக இருக்கின்ற
இந்த மாவட்டத்தில் முஸ்லிம் மற்றும் இந்து மக்களும் சேர்ந்து வாழ்ந்து
வருகின்றனர்.
இந்த மாவட்டத்திலே பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகிறது. குறிப்பாக கடற்றொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர். விவசாயிகளுக்கும் பல்வேறு
பிரச்சினைகள் உள்ளது.
கோட்டாபய ராஜபக்சவின் (Gotapaya Rajapaksa) மோசமான ஆட்சியின் போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால்
இந்த மாவட்டமும் பாதிக்கப்பட்டது.
மக்களுக்கு தெளிவுபடுத்தல்
இந்த மாவட்டத்தில் இருக்கின்ற பாதிப்புக்களில் இருந்து எம்மை மீட்டெடுப்பதற்காகவும், இந்தியாவிற்கு (India) அருகில் இருக்கின்றமையினால் அந்த நாட்டிற்கும் தலைமன்னாருக்கும் இடையில் பாலம்
அமைத்தல், கப்பல் சேவையை ஆரம்பித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தி மக்களின்
வாழ்வாதாரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து நாங்கள்
சஜித் பிரேமதாசாவுடன் பேசி உள்ளோம்.
எதிர்வரும் 3ஆம் திகதி அவர் மன்னாருக்கு வருகின்ற போது குறித்த
விடயங்கள் தொடர்பாக மக்களுக்கு தெளிவாக தெரியப்படுத்துவார்.
அவரின் வெற்றிக்கு பின்னர் என்ன சொல்கிறாரோ அதை செய்வதற்கு அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் கட்சி அவருடன் இணைந்து செயற்படும்.” என்றார்.