ரஷ்யாவிடம் (Russia) உக்ரைன் (Ukraine) தோல்வியை ஒப்புக்கொள்ளும் என்றால், விளாடிமிர் புடினின் (Vladimir Putin )அடுத்து இலக்கு வைத்துள்ள நாடு இது தான் என ஜேர்மனியின் (Germany) வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனுக்கு அடுத்து மால்டோவா (Moldova) மீது ரஷ்யா ஊடுருவும் என குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மால்டோவா நாட்டின் தலைநகரான சிசினாவில் முன்னெடுக்கப்பட்ட மாநாடு ஒன்றில் பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதித்து வந்த நிலையிலேயே விளாவிமிர் புடினின் அடுத்த இலக்கு குறித்து அன்னலெனா பேர்பாக் அம்பலப்படுத்தியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
உக்ரைனை ஆதரிப்பதற்காக நாம் செய்யும் அனைத்தும் மால்டோவாவைப் பொறுத்தவரையில் அதன் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதை உறுதி செய்வது போன்றது என அன்னலெனா பேர்பாக் (Annalena Baerbock) குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனை ரஷ்யா கைப்பற்றும் என்றால், அவர்களின் அடுத்த இலக்கு மால்டோவா என்பது தான் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மால்டோவா ஜனாதிபதி மையா சண்டு (Maia Sandu) தெரிவிக்கையில், உக்ரைன் போர் காரணமாக மால்டோவா கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே நாம் கண்டனம் தெரிவித்து வருகிறோம். உக்ரைனில் போர் நீடிக்கும் வரையில் மால்டோவா பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.