ரணில் (Ranil Wickremesinghe) மற்றும் அநுரவின் (Anura Kumara Dissanayake) எந்த அளவு டீல் செய்து கொண்டாலும், மக்களை சுபீட்சமான வளமான வாழ்க்கைக்கு கொண்டு செல்வதற்கு மக்களுடனே தமது டீல் காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
பண்டாரவளையில் (Bandarawela) இன்று (14) இடம்பெற்ற வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், அநுரகுமார மற்றும் ரணில் விக்ரமசிங்க கூட்டணியிடம் நாட்டை ஒப்படைப்பதா? இல்லை என்றால் நாட்டை கட்டி எழுப்புகின்ற, நாட்டை வெற்றி பெறச் செய்யும் பொது
மக்களின் யுகத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்வதா? என்ற தீர்மானம் மக்கள் வசமே காணப்படுகின்றது.
பல்கலைக்கழக கல்வி
இன்று ரணில் மற்றும் அநுர பெரிய டீல் ஒன்றை செய்திருக்கின்றார்கள். அது சஜித் பிரேமதாசவை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்கின்ற டீல் ஆகும்.
பாலர் பாடசாலை கல்வியை இலவசமாக வழங்குவோம். எமது நாட்டில் பாலர் பாடசாலை கல்வியிலிருந்து பல்கலைக்கழக கல்வி வரையான இலவச கல்வியை வலுப்படுத்துவோம்.
பாலர் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களையும் உதவி ஆசிரியர்களையும் நியமித்து அவர்களுக்கான கொடுப்பனவொன்றை வழங்கி இலவச கல்வியை பாலர் பாடசாலையிலிருந்து ஆரம்பிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேயிலை உற்பத்தி
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு விவசாயம் செய்யப்படாத காணிகளை வழங்கி, சிறு தேயிலைத் தோட்ட உற்பத்தியாளர்களாக உருவாக்குவோம்.
தேயிலை உற்பத்தி உள்ளிட்ட ஏனைய விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் உரமூடை ஒன்றை 5000 ரூபாய்க்கு வழங்குவதோடு, விவசாய அறுவடைகளுக்கு நிர்ணய விலையைப் பெற்றுக் கொடுப்போம்.
குளிரூட்டி வசதிகள், பசுமை இல்ல வசதிகள் என்பனவற்றின் ஊடாக சகல வசதிகளையும் கொண்ட விவசாயத் துறையில் விவசாயிகளை ஈடுபடுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.